தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு 01/11/2011 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி, சுப்ரமணியபுரம் S.S மஹாலில் காலை 10 மணிக்கு
திருச்சியில் மாநில செயற்குழு இன்று திருச்சியில் மாநில தலைவர் ஷம்சுல் லுஹா தலைமையில் நடை பெற்றது.
இந்த செயற்குழுவில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை 7 % ஆக உயர்த்தக் கோரிக்கை
தமிழக இஸ்லாமிய சமுதாயத்தின் நீண்டகால ஜீவாதார கோரிக்கையான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் பல கட்டங்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 3.5 % உள் ஒதுக்கீட்டை அன்றைய தமிழக அரசு வழங்கியது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குவேன் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் இன்று வரைக்கும் இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீடு உயர்த்தப்படவில்லை.
தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய மக்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு தற்போது நடப்பிலிருக்கும் 3.5 % இடஒதுக்கீட்டை 7 % ஆக உயர்த்த வேண்டும் என்று இந்த செயற்குழு கோரிக்கை விடுக்கின்றது.
2.குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறக் கோரிக்கை
இந்தியாவில் வாழும் இஸ்லாமிய மக்களை தனிமைப்படுத்தி அகதிகளாக மாற்றும் வகையில் இயற்றப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கொரோனா பேரிடர் காலம் முடிவடைந்த பிறகு மீண்டும் குடியுரிமைத் திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என்று பா.ஜ.கவின் தேசியத் தலவைர் ஜெ.பி நட்டா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால் ஒரு சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக அகதிகளாக மாற்றும் வகையில் இந்த சட்டம் இருக்கின்றது. வீழ்ந்து கிடக்கும் இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்படுத்தி நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுக்கும் பணிகளைச் செய்யாமல் தொடர்ந்து ஒரு சமூகத்தை குறிவைக்கும் வகையிலேயே குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே மத்திய அரசு குடிமைத் திருத்தச்சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதுமட்டுமின்றி என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் போன்ற நடவடிக்கைகளை எந்த நிலையிலும் மேற்கொள்ளக்கூடாது என்று இந்த செயற்குழு கேட்டுக்கொள்கின்றது.
3.இஸ்லாமிய கட்சிகள் ஓரணியில் திரளக் கோரிக்கை
தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக இஸ்லாமிய கட்சிகள் அனைவரும் ஓரணியில் இணைந்து அரசியல் கட்சிகளிடம் அதிகமான பிரதிநிதித்துவத்தைப் பெற்று இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டும்.
இஸ்லாமிய அரசியல் கட்சிகள் பல அணிகளில் இணைந்து எதிர் அணியாக போட்டியிடுவது இஸ்லாமிய சமூகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை தரும் என்பதை உணர்ந்து அனைத்து கட்சிகளும் ஒரே அணியாக இணைந்து போட்டியிட்டு அதிகமான அதிகமான சட்ட உறுமன்ற உறுப்பினர்களைப் பெற்று அதன் மூலம் சமுதாயத்தின் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் எதிரொலிக்க வேண்டும் என்று இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
4.நபிவழிக்கு முரணான காரியங்களை விட்டொழிக்க கோரிக்கை
அறியாமை இருளில் சிக்கிக் கிடந்த மக்களை ஓரிறைக் கொள்கையை நோக்கி அழைத்த உத்தமத் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு அனாச்சாரங்களும், மார்க்கத்திற்கு முரணான காரியங்களும் நடைபெற்று வருகின்றது.
இஸ்லாமிய சமுதாயம் இதையெல்லாம் தவிர்த்து நேர்வழி பெற்று சுவனப் பாதையை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்று இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
.
5.ஃபிரான்ஸ் நிகழ்வுக்கு கண்டனம்
ஃபிரான்ஸ் நாட்டில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தொடர்ச்சியாக நமது உயிருனும் மேலான நபிகளாரை இழிவுபடுத்தும் செயல்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
உலக மக்கள் பல கோடிபேர் தங்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கும் ஒரு தலைவரை இழிவுபடுத்தும் செயலை எந்த ஒரு நாடும் ஆதரிக்கக் கூடாது, அந்தக் கொடும் செயலைச் செய்பவர்களுக்கு ஊக்கம் அளிக்க கூடாது, அது போன்ற செயல்களை செய்து வன்முறையைத் தூண்டுபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்றும் இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
6.ஃபிரான்ஸ் தேவாலய தாக்குதலுக்கு கண்டனம்
ஃபிரான்ஸ் நாட்டில் தேவாலயத்திற்குள் புகுந்து அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மனித சமுதாயத்திற்கு எதிரானது. பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் என்கிற நபிகளாரின் போதனைகளுக்கு மாற்றமானது.
அமைதியையும், நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் போதித்த சத்தியத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் சில விஷமிகளின் செயலை முன்வைத்து யார் வன்முறை செயல்களில் ஈடுபட்டாலும் அது நபிகளாரின் வழிமுறைக்கு எதிரானதாகும்.
தேவாலயத்திற்குள் புகுந்து அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது. இது போன்ற செயல்களை இஸ்லாமிய மார்க்கம் ஒருபோதும் ஆதரிக்காது. எனவே அந்த சம்பவத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.
7.சமூக ஊடகங்களில் தூவப்படும் வன்முறை விஷ விதைக்குக் கண்டனம்
வட மாநிலங்களைப் போல தமிழகத்திலும் மதப் பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு அதன் மூலம் தங்களது அரசியல் ஆதாயத்தை அடைவதற்கு சங்பரிவார சக்திகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். தமிழகத்தில் இஸ்லாமியர்களைக் குறிவைத்து சமூக ஊடகங்கள் வாயிலாக பல்வேறு வெறுப்பு பிரச்சாரங்களை பாஜக மற்றும் சங்பரிவார சக்திகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்ச்சிகளையும் கோபத்தையும் தூண்டி அதன் மூலம் நாட்டில் பரபரப்பை உண்டாக்க வேண்டும், அதை வைத்து தங்களது அரசியல் ஆதாயத்தை அறுவடைச் செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் காய்நகர்த்துகின்ற சங்பரிவார சக்திகளின் சதிகார செயல்களை இந்த செயற்குழு மிக வன்மையாக கண்டிக்கிறது.
காவல் துறைக்கு வேண்டுகோள்
தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் பல்வேறு அவதூறுகளையும், இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வரும் சங்பரிவார சக்திகள் மீது தமிழக காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
8.வாக்குச் சீட்டில் தேர்தல் நடத்த வேண்டும்
இந்தியாவில் ஈ.வி.எம் வாக்கு இயந்திரங்கள் மூலம் நடைபெற்று வரும் தேர்தல்களில் பல்வேறு குளறுபடிகள்,தில்லுமுல்லுகள் நடப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. வாக்கு இயந்திரங்களில் மோசடி செய்தல், வாக்கு இயந்திரங்களை மாற்றி வைத்தல் போன்ற பல்வேறு மோசடிகள் நடைபெறுவதாக ஆதாரங்களுடன் புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன.
எனவே இனி வரும் காலங்களில் நடத்தப்படும் தேர்தல்களை பழைய முறைப்படி வாக்குச் சீட்டில் நடத்த வேண்டும் என்று இந்த செயற்குழு கேட்டுக் கொள்கின்றது.
9.அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள்
தமிழகத்தில் முஸ்லிம்கள் கணிசமான அளவில் வாழ்ந்து வரும் நிலையில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் இஸ்லாமிய சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை. தமிழத்தில் இருக்கும் கட்சிகளில் பல லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஆனால் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் ஒன்று அல்லது இரண்டு இஸ்லாமிய வேட்பாளரை மட்டுமே நிறுத்துகின்றன.
எனவே அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கி இஸ்லாமியர்கள் அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும். அதுபோல கூட்டணிக் கட்சிகளாக இருக்கும் இஸ்லாமிய சமுதாய கட்சிகளுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கி அதிக இடங்களை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்று இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
இப்படிக்கு
பா.அப்துல் ரஹ்மான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ)
ஊடக பிரிவு
9789030302